Monday, January 31, 2005

சன் டிவியின் பக்தித் தொடர் - 'ராஜ ராஜேஸ்வரி'!

நான் பொதுவாக இது போன்ற பக்திப் பரவசமும், மாயமந்திரமும் நிறைந்த தொடர்களை பார்ப்பது கிடையாது. நேற்று (30-1-2005) இரவு பொழுது போகாமல், என் மகள்களுடன் அமர்ந்து 'ராஜ ராஜேஸ்வரி' தொடரைப் பார்த்தேன். இதை விட சிறப்பாய் மக்களை முட்டாளாக்க முடியாது என தோன்றுமளவுக்கு, பக்தி உணர்வை காமெடி ஆக்கும் வகையில், பல 'திடுக்' காட்சிகள் கொண்ட சூப்பரான ஒரு தொடர் இது! பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உதயமானவர்கள்(!), இது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுவது தான், கேலிக்கூத்தின் உச்சக்கட்டம்! வியாபார நோக்கு அவசியம் தான். ஆனால், நம்பத்தகாத வகைக் காட்சிகளை, உலகம் முழுதும் பார்க்கும் டிவியில், வரையறை இல்லாமல் வாராவாரம் ஒளிபரப்பி இலாபம் ஈட்ட வேண்டுமா என்பதே கேள்வி!

இத்தொடரை பார்ப்பதன் விளைவாக என் மகள்கள் பக்தி நிறைந்தவர்களாக ஆகிறார்களோ இல்லையோ, சீக்கிரமே 'Missile Technology' பற்றி சந்தேகங்களை கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! நேற்று இத்தொடரில், நீலி என்ற நல்ல ஆவிக்கும், மாயச்சாமி மற்றும் வள்ளி என்ற இரண்டு தீயவர்களுக்கும் (கெட்டவரில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் --- இதிலெல்லாம் நன்றாக சமத்துவம் காட்டுவார்கள்!) இடையே நடக்கும் மந்திர, தந்திர போராட்டத்தை விலாவாரியாக காண்பித்தார்கள். இப்போராட்டமே, ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோயிலில் இருந்து ராஜியை (தொடரின் கதாநாயகி) மண்ணெடுக்க விடாமல் (எதற்கு என்று எனக்குத் தெரியாது? வீடு கட்டுவதற்காக இருக்கலாம்! ) தடுப்பதற்காகத் தான்!


வில்லன்கள் இருவரும் அக்னி வளர்த்து, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி, தங்கள் கைகளால் தலையை இடமும் வலமுமாக சுற்றி கோணங்கித்தனம் செய்தவுடன், ஒரு லேசர் வகை ஆயுதம் அக்னியிலிருந்து புறப்பட்டு, வானை நோக்கி சீறிப் பாய்கிறது!!! சாதாரணமாக வாய் ஓயாமல் பேசும் என் இரண்டாவது மகளிடமிருந்து (3 வயது) அடுத்த 20 நிமிடங்கள் பேச்சே இல்லை! அந்த ஏவுகணை கிளம்பிய மறுகணமே அதை உணர்ந்து விடும் நீலி ஆவி (நடிகை கீர்த்தனா!) குழந்தைகள் அலறும் வண்ணம் பயங்கரமாக 'பேய்' முழி முழித்து, தனது உள்ளங்கையிலிருந்து வெளிப்படும் ஓளியினால் கோயிலுக்கு (கோபுரத்தையும் சேர்த்து!) ஒரு Electromagnetic தடுப்பு வலையை உண்டாக்குகிறது. 'கொடியவர்களின் கூடாரத்தில்' உதித்த ஏவுகணை அத்தடுப்பு வலையில் மோதிப் பார்த்து சலித்து திரும்பி எங்கோ போய்விடுகிறது!

தீயவர்கள் இன்னொரு ஆயுதம் நெருப்பிலிருந்து தயாரித்து ஏவுகிறார்கள்! நீலி ஆவி பதில் ஆயுதம் உருவாக்கி அதை பஸ்பம் ஆக்குகிறது. அடுத்து, இருவரது சக்தியையும் ஒருங்கிணைத்து ஒரு கொடிய மிருக வடிவ லேசர் பொம்மையை உருவாக்கி, இம்முறை நீலியையே அழிக்க அனுப்புகிறார்கள்! என் மகள்கள் "அப்பா, நீலி செத்துடுவாளா?" எனக் கேட்டனர், நீலி ஏற்கனவே செத்த ஓர் ஆவி என்பதை உணராமல்! நானும் 'நீலி காலி' என்று தான் நினைத்தேன்! ஆனால் நீண்ட கூந்தல் கொண்ட நீலி ஆவியோ
"உனக்கும் பெப்பே, உன் பாட்டனுக்கும் பெப்பே!" என்ற வகையில், அந்த தாக்குதலையும் முறியடித்து ஒரு இடிச்சிரிப்பு சிரித்தது பாருங்கள், எனக்கே கதி கலங்கி விட்டது!! என் மகள்களோ பயமின்றி ரசித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும், பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!

அதற்கடுத்து, நீலி ஆவி நேராக கொடியவர்கள் முன் அகாலமாகத் தோன்றி, தாக்குதலை நிறுத்துமாறு அவர்களை எச்சரிக்க, அதை மதிக்காமல் திமிராகப் பேசும் இருவரையும், 'டொய்ங்' என்ற சத்தத்துடன், காணாமல் போக வைக்கிறது! அடுத்த வாரம் மாயச்சாமியும், வள்ளியும் மறுபடியும் உயிர் பெற்று விடுவார்கள் என்று என் மூத்த மகள் அடித்துக் கூறினாள்! இது போன்று பல சீரியல்கள் அவள் பார்த்ததால் விளைந்த ஞானத்தின் பயன்!!! அதே சமயம் கோயிலில், நான் மேலே குறிப்பிட்ட தொடரின் கதாநாயகி ராஜி, பக்திப் பரவசத்துடன், கண்ணில் நீர் மல்க, கோயிலில் எந்த இடத்தில் மண் எடுத்தால் நல்லது என்றுரைக்குமாறு கருப்புசாமியிடம் கோரிக்கை விடுக்கிறாள். இத்தொடரில் முணுக்கென்றால் கேட்டவரின் முன் பிரத்யட்சம் ஆகும் தெய்வம், இம்முறை (for a change) ராஜி முன் தோன்றாமல், கருப்புசாமியின் அருவாள் பதித்த இடத்தைச் சுற்றி ஒரு லேசர் ஒளி வட்டம் இட்டு, அவ்விடத்திலிருந்து மண் எடுக்குமாறு ஸிம்பாலிக்காக உணர்த்துகிறது!!! ராஜி மண்ணை எடுத்து ஒரு குடத்தில் இட, இதற்கு மேல் சீரியலைப் பார்த்தால் எனக்குள்ள தெய்வ பக்தியும் போய், புத்தியும் பேதலிக்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்த நான், வீட்டை விட்டு 'எஸ்கேப்' ஆனேன்!!!!!!

இத்தொடரின் காட்சிகளில் தெரியும் தொழில்நுட்பம், அந்தக் காலத்து மகாபாரதத் தொடரில் வருவது போல் இல்லாமல் (ஒரு டிவித்தொடர் லெவலுக்கு) much better எனத் தோன்றியது. ஆனாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள், கற்கால டைனாசர்களை நம் முன் கொணர்ந்து நிறுத்த தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நாம் என்ன செய்கிறோம் பாருங்கள்! தொழில்நுட்பத்தை கேலிக்கூத்துக்கு துணையழைக்கிறோம்!
ராஜ ராஜேஸ்வரியே துணை!

'பிச்சைப்பாத்திரம்' சுரேஷ் கண்ணன் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ராஜி - டகிள்பாஜி


என்றென்றும் அன்புடன்,
பாலா

Sunday, January 30, 2005

சிறுவயது சிந்தனைகள் - பகுதி 7


என் இளம்பிராயத்து நண்பர்களில் முக்கியமானவர்கள், குரு, 'சிவாஜி' சாரதி, 'நரசிம்மன்'கள் (ஒரே பெயரில் இருவர்), கண்ணன், 'குண்டு' முரளி, 'ஹேமமாலினி' முரளி (நடிகை ஹேமமாலினி அவனது உறவினர் என்பதால்!), கோவிந்து, ரவி-பாலு (இரட்டையர்கள்), ஸ்ரீகாந்த், ஸ்ரீநாத் ஆகியோர். ஒவ்வொருவரிடமும், ஒரு திறமை இருந்தது. ஓரு நரசிம்மன் கபடியில் கில்லாடி; இன்னொருவனைப் போல, under-arm-இல், அத்தனை வேகமாக Off-cutter வகை பந்து வீசுபவரை நான் இது வரை சந்தித்ததில்லை! அவனை மிக கவனமாக எதிர்கொள்ள வேண்டும். கொஞ்சம் அசந்தால், ஸ்டம்ப் பறந்து விடும், அல்லது Plumb-in-Front!

குரு கில்லி தாண்டு விளையாட்டில் கரை கண்டவன். 'குண்டு' முரளி சேவாக் போல் பலத்தை பிரயோகித்து, மட்டை பிடித்து விளாசுவதில் நிகரற்றவன்! கண்ணன் சாத்வீகமானவன். டிராவிட் போல, நன்றாக மட்டை போடுவதில் வல்லவன். அவன் விக்கெட்டை எடுக்க போராட வேண்டியிருக்கும். 'சிவாஜி' சாரதி நடிப்பில் கெட்டி. அவனுக்கு பல சிவாஜிப் படப்பாடல்களும் வசனங்களும் அத்துப்படி! Great Entertainer! 'ஹேமமாலினி' முரளி மிக அழகாகப் பாடுவான்.

சைக்கிள் ஓட்டுவதில் ரவியை மிஞ்ச ஆள் கிடையாது. சைக்கிள் அவனிடம் நின்று விளையாடும்! ஸ்ரீகாந்த் போல் ஒரு தைரியசாலியை பார்க்க இயலாது. குறி பார்த்து கோலி அடிப்பதில் கோவிந்துக்கு நிகர் அவன் தான்! 'கோலி மேல் கோலி' விளையாட்டில், எங்களை வென்று எங்கள் கோலிகளையெல்லாம் கைப்பற்றி விடுவான்! பின்னர் மனமிரங்கி, ஆளுக்கு சில கோலிகளை திரும்பக் கொடுத்து விட்டுச் செல்வான். நான் செஸ் ஒரளவு நன்றாக விளையாடுவேன்! (இவ்வளவு எழுதும்போது, என்னைப் பற்றியும் ஏதாவது பெருமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டும் அல்லவா?) என் தம்பி சிறு வயதில் சரியான முரடன். 'தம்பி உடையான், படைக்கு அஞ்சான்' என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினான்!!!

பீச்சில் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், மூன்று வகையான ஆட்டங்கள் ஆடியிருக்கிறோம். 1. UNDER-ARM கிரிக்கெட், முக்கால்வாசி நேரம், டென்னிஸ் பந்தைத் தான் உபயோகிப்போம்,2. கையை உயர தூக்கி பௌலிங்கு செய்யும் நார்மல் கிரிக்கெட் (இதற்கு கிரிக்கெட் அல்லது கார்க் பந்துகளையும் உபயோகிப்போம்)3. ·போர் அண்ட் சிக்ஸர் (Four and Sixer!)

மூன்றாவதைப் பற்றி சற்று விலாவாரியாகச் சொல்லி விடுகிறேன்! கடற்கரையில், மணற்பரப்பு துவங்கும் இடத்திலிருந்து சுமார் 50-60 அடி உள்ளே, மட்டையாளர் நின்று கொண்டு இருப்பார். அவருக்கு பந்தை வாகாக (Full Toss-ஆக) தூக்கிப் போட இன்னொரு நபர் மட்டையாளரிடமிருந்து 10 அடி தூரத்தில் இருப்பார். மட்டையாளர் முடிந்த அளவு பலத்தை பிரயோகித்து பந்தை அடிக்க வேண்டும். மணற்பரப்பின் விளிம்பில், பந்து தடுப்பாளர்கள் (இத்தனை பேர் என்று கணக்கெல்லாம் கிடையாது!) பலர் வியூகம் அமைத்து காத்திருப்பார்கள்.

மட்டையாளர் அடித்த பந்து, மணற்பரப்பில் பிட்ச் ஆகி, அதைக் கடந்து, ரோடுக்கு (மெரீனா பீச்சலிருந்து எலியட்ஸ் பீச் வரை செல்லும் காதலர் பாதை) சென்று விட்டால், 4 ஓட்டங்கள், பிட்ச் ஆகாமல் கடந்தால் 6 ஓட்டங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மட்டையாளரை அவுட்டாக்க 2 வழிகள் உண்டு. ஒன்று, வாகாகப் போடப்பட்ட பந்தை, தொடர்ந்து 3 முறை மட்டையாளர் தவற விடுவது. மற்றது, அவர் அடித்த பந்தை மணற்பரப்பில் இருந்தவாறே, தடுப்பாளர் காட்ச் பிடிப்பது. மேலே குறிப்பிட்டபடி, இவ்விளையாட்டில் 'குண்டு' முரளியை 'அவுட்' ஆக்குவது என்பது இயலாத காரியம்! அவனாக, 'Retired Hurt'-ஆனால் தான் உண்டு!!!

விளையாட்டுக்களுக்கு அடுத்து, நாங்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தது, பார்த்தசாரதி கோயிலில் வருடம் தோறும், எங்களது பள்ளி விடுமுறைக் காலத்தில் நடைபெறும் உத்சவம் தான்! உத்சவத்திற்கு ஒரு வாரம் முன்பே மிகுந்த உற்சாகத்தோடு, உண்டியல் குலுக்கி, முடிந்த அளவு பணம் திரட்டி, அந்த 10 நாள் விழாவை ஆனந்தமாக வரவேற்கத் தயாராவோம். ஒவ்வொரு நாளும், உத்சவர் எந்த வாகனத்தில் வீதி வலம் வருவாரோ, அதைப் போலவே ஒரு மினியேச்சர் பல்லக்கு/வாகனம்/விக்ரகம் வடிவமைத்து, அதைத் தூக்கிக் கொண்டு, அவர் பின்னால், நாங்களும் மாட வீதிகளை வலம் வருவோம். தினமும் உண்டி குலுக்கி, அடுத்த நாள் தயாரிப்புச் செலவை ஓரளவு ஈடு கட்டுவோம்.

ஒரு முறை, கோயில் உத்சவரின் பிரதிபலிப்பாக அமைந்த, எங்கள் சிறிய வடிவ கருட வாகனத்தைக் கண்டு பலரும் வியந்து பாராட்டினர். பிறிதொரு முறை, தச்சாளரைக் கொண்டு ஒரு அழகிய சிறுதேரை வடிவமைத்து, அதை சிறப்பாக அலங்கரித்து, எங்கள் விக்ரக மூர்த்தியை அதில் அமர்த்தி, கோயிலின் பெரிய தேருக்குப் பின்னால் அதை பெருமையாக நாங்கள் இழுத்துச் சென்றபோது, திருவல்லிக்கேணியே மூக்கில் விரலை வைத்தது. அதைத் தொடர்ந்து, ஒரு 10 நாட்கள் நானும் என் நண்பர்களும் கர்வமாகவே திரிந்தோம்!!!

மேற்கூறிய நண்பர்களில், குருவையும் (சென்னை மாநகராட்சியில் பணி), 'off cutter' நரசிம்மனையும் (தற்போது, 'விஜயா ஸ்டோர்ஸ்' உரிமையாளன்!) இப்போதும் சந்திப்பதுண்டு. கண்ணன் CA படிப்பு முடித்து, பெங்களூரில் பெரிய வேலையில் இருக்கிறான். ஸ்ரீகாந்த் பொறியியல் (Mechanical) படிப்பு முடித்து, ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து விட்டான். சாரதி சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பணி செய்வதாகக் கேள்விப்பட்டேன். சந்திக்க வேண்டும்! இன்னொரு நரசிம்மன், அமெரிக்காவில் (வேறென்ன, மென்பொருள் சம்மந்தப்பட்ட வேலை தான்!) இருக்கிறான். ரவியும், பாலுவும் குடும்பத்தோடு மும்பை சென்று விட்டனர். மற்ற சில சிறு வயது நண்பர்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்! என்ன இருந்தாலும், "மூழ்காத ஷிப்பே ·பிரெண்ட்ஷிப் தான்" அல்லவா?


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, January 29, 2005

படமும் நகைச்சுவையும் - 1






என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, January 28, 2005

ஒரு பாமர ரசிகையின் MSS குறித்த மலரும் நினைவுகள்



(மேலே உள்ள படத்தில், இடமிருந்து வலம், டாக்டர் நாராயணண் சக்ரவர்த்தி, திரு.சதாசிவம், MSS & என் சித்தி)
என் சித்தி திருமதி வேதவல்லி ரகுராமன், MS அவர்களின் தீவிர ரசிகை என்பது எனக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால், கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் MS அவர்களுடன் அவர் நட்பு முறையில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்பதை சமீபத்திய இரயில் பயணத்தின் போது தான் தெரிந்து கொண்டேன்! அந்த உரையாடலில், MS அவர்களைப் பற்றி சித்தி கூறிய பல விஷயங்களை கேட்டபோது தான், MS என்ற மகாமனுஷியை நான் நேரில் ஒரு முறை சந்தித்து பேச முடியாமல் போனது பெருங்குறையாகத் தோன்றியது.

சித்தி, தன் சிறுவயதில், திருவல்லிக்கேணியில், M.S.காந்திமதி என்பவரிடம் கர்னாடக இசை பயின்று வந்தார். MS-இன் குரலைக் கேட்டதிலிருந்து அவரை சந்திக்க, சிறுமியாக இருந்த சித்திக்கு மிகுந்த ஆசை! 1957-இல், சித்தியின் 15-ஆவது வயதில், பார்த்தசாரதி சுவாமி சபாவில் நடந்த ஒரு MS-இன் கச்சேரியின் முடிவில், கஷ்டப்பட்டு MS-ஐ சந்தித்து, 'உங்களுடன் பேச வேண்டும், உங்கள் இல்லத்துக்கு வரலாமா?' என்றவுடன், தன்னிடம் அவ்வாறு வினவிய சிறுமியிடம் MS, மலர்ந்த முகத்துடன், 'ஒரு ஃபோன் பண்ணிவிட்டு பேஷாக வாருங்கள், பேசுவோம்' என்றார்! அந்த தன்னடக்கம் தான் MS பல சிகரங்களைத் தொட முக்கியக் காரணம்!

இரு நாட்களுக்குப் பின், தொலைபேசியில் சதாசிவம் அவர்களிடம் அனுமதி பெற்று, துணைக்கு சகோதரியை அழைத்துக் கொண்டு, நுங்கம்பாக்கத்தில் இருந்த MS அவர்களின் வீட்டுக்கு சித்தி சென்றார். இரு சிறுமியரும் கூர்க்காவுடன் மன்றாடி, வீட்டுக்குள் சென்று MS-ஐ சந்தித்துப் பேசினர். பல காலம் அறிந்தவர்களுடன் உரையாடுவது போல் MS அச்சிறுமியருடன் வெகுநேரம் பேசினார், சில பாடல்களும் பாடிக் காட்டினார் என்றும், அந்தி சாய்ந்த வேளையில் அப்பெண்கள் வீடு திரும்ப வேண்டியதை எண்ணி, தனது காரில் MS அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தார் என்றும் என் சித்தி கூறியபோது, MS இசையில் மட்டுமல்ல, அன்பிலும், பண்பிலும் மிக உயர்ந்தவர் என்பது புலப்பட்டது!

அச்சந்திப்புக்குப் பின், MS வாழ்ந்த வரை, பல முறை அவரைப் பார்க்க சித்தி சென்றிருக்கிறார். பல கச்சேரிகளின் முடிவில், முண்டியடித்து, MS-ஐ பார்த்து, ஒரு சில நிமிடங்களாவது பேசுவதை சித்தி வழக்கமாக வைத்திருந்தார். பல முறை, MS-இன் அறிமுகம் வேண்டிய உறவினர்களையும், நண்பர்களையும், MS-இடம் அழைத்துச் சென்று, சித்தி அவர்களை மகிழ்ச்சியுற செய்திருக்கிறார்! சித்தியைப் பார்த்த ஒவ்வொரு முறையும், MS, 'எல்லோரும் சௌக்யம் தானே, என்ன சாப்பிடுகிறீர்கள்?' என்று அன்பாக விசாரித்த பின் தான், மற்றதைப் பேசுவார். MS வீட்டுக்குச் செல்பவர்களுக்கு, தவறாமல் கிடைக்கும் ஒரு அயிட்டம் சுக்கு காபி தான்! என் சித்தியிடம் என்றில்லை, அவரை சந்திக்கச் செல்லும் ஒவ்வொருவரிடமும் MS, தன்மையாக நடந்து கொள்ளும் பாங்கும், இனிமையாக பழகும் விதமும், சந்திக்கச் சென்றவரை கட்டிப் போட்டு விடும் என சித்தி கூறினார். அதாவது, தான் ஒரு சாதனையாளருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை சந்திக்க வந்த நபர் உணரா வண்ணம் MS நடந்து கொள்வாராம். எந்த வித சூழ்நிலையிலும், MS இறுதி வரை அதிலிருந்து தவறியதில்லை!

சங்கீதத்தில் பல சந்தேகங்களை, எத்தனை முறை கேட்டாலும் மிகுந்த பொறுமையுடன், சலிக்காமல் MS அவற்றை நிவர்த்தி செய்வார். என் சித்தி, பரிவு, உபசாரம், எளிமை, பணிவு, பரந்த மனப்பான்மை, உதவும் மனப்பாங்கு போன்ற பல நல்ல குணங்களை MS-ஐ பார்த்து தான் வளர்த்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது! MS-ஐ சந்தித்த ஒவ்வொரு முறையும் அவரை பாதம் தொட்டு வணங்குவதையும், பின்னர் அச்சந்திப்பைப் பற்றிய தன் எண்ணங்களை ஒரு கடிதமாக எழுதி MS-க்கு அனுப்புவதையும் சித்தி வாடிக்கையாக செய்து வந்திருக்கிறார்! சித்தியின் கையெழுத்து அழகாக இருப்பதாக (நிஜமாகவே!) MS பாராட்டியிருக்கிறார். மற்றவரிடம் உள்ள சின்னச்சின்ன நல்ல விடயங்களைக் கூட கவனித்து பாராட்டும் இயல்பு அந்த இசை மாமேதையிடம் இருந்தது!

மிகுந்த மனஉளைச்சலிலும், கவலையிலும் இருந்த சமயங்களில், MS அவர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்தால், ஒருவித தெம்பும், அமைதியும் ஏற்பட்டதாக சித்தி கூறினார். தன் இசையால் மட்டுமல்ல, பேச்சாலும் பிறரை உற்சாகப்படுத்த MS தவறியதில்லை போலும்! சித்திக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறிந்த MS தனது மருத்துவரை தொலைபேசியில் அழைத்து, தனது ரசிகை ஒருவரை அவரிடம் அனுப்புவதாகவும், ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். உண்மையான அக்கறையும் மனிதநேயமும் கொண்டவர் அந்த இசைக்குயில்!

எங்கள் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற பல நிகழ்வுகளுக்கு MS வருகை தந்திருக்கிறார் என சித்தி கூறக் கேட்டேன். பாடுவதற்காக வராவிட்டாலும், யாராவது அவரை பாடுமாறு கேட்டுக் கொண்டால், கேட்பவர்கள் திருப்தி அடையும் வரை, அவர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களைப் MS பாடுவாராம். முப்பது வருடங்களுக்கு முன் நடந்த என் மாமா ஸ்ரீதரனின் திருமணத்திற்கு MS வந்திருந்ததும், நாற்காலியைப் புறக்கணித்து சாதாரணமாக தரையில் அமர்ந்து பலருடன் அளவளாவியதும், என் நினைவிலும் பசுமையாக உள்ளது. IIT, சென்னையில் படித்த என் சித்தியின் மகன் Dr.நாராயணன் சக்ரவர்த்தி, அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்றபின், தாயகம் திரும்பி, அதே கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்த விடயத்தைக் கேள்விப்பட்டவுடன், MS அவனை அழைத்து, 'உன்னைப் போன்றவர் வெளிநாட்டில் படித்தாலும், திரும்ப வந்து இங்கேயே வேலை செய்வது, நாட்டுக்கு செய்யும் மிக நல்ல காரியம், ரொம்ப சந்தோஷம்' என்று கூறி ஆசிர்வதித்தார்!

1997-இல் சதாசிவம் அவர்கள் காலமான பின்னர், MS-ஐ சந்தித்த என் சித்தி, பூவும் நெற்றி நிறைய குங்குமமும் இல்லாத MS-ஐ பார்த்தபோது, மிகுந்த சங்கடமும், சோகமும் மனதை வதைத்ததாகக் கூறினார். அந்நிகழ்வுக்குப் பின்னர், MS மேடைக் கச்சேரிகளில் பாடுவதை முழுவதும் தவிர்த்து விட்டாராம். இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, MS-க்கு காய்ச்சல் வந்து அவரால் நடக்க இயலாமல் போனது. பெரும்பாலும் கட்டிலில் படுத்திருந்த அச்சமயத்திலும், அவரை சந்திக்கச் சென்ற என் சித்தியைக் கண்டவுடன் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்து அன்பாகப் பேசிக் கொண்டிருந்ததோடு, அவருக்காக வாங்கிச் சென்ற ஆப்பிள் பழங்களுக்காக என் சித்திக்கு நன்றியும் தெரிவித்தார்! சித்தியுடனான MS குறித்த, இரயில் பிரயாண உரையாடலின் முடிவில், MS ஒரு இசை சகாப்தமாக விளங்காமல் இருந்திருந்தாலும், அவரைப் போன்ற நல்ல உள்ளங்களை இக்காலத்தில் பார்ப்பது அரிதான ஒன்று எனத் தோன்றியது!


என்றென்றும் அன்புடன்,
பாலா

முழுமை பெறா பதிவு!

நான் முன்பு பதித்த பல்லவியும் சரணமும் - 14 பதிவில், சரணங்கள் 4,6,7,9 ஆகியவற்றுக்கு பல்லவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை! முடிந்தவர்கள் முயற்சிக்கலாம் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, January 26, 2005

பல்லவியும் சரணமும் - 14

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. எழில் வானமெங்கும் பல வண்ண மேகம், அழகான வீணை ...
2. நான் அந்த கிள்ளை போல மாற வேண்டும், வானத்தில் வட்டமிட்டுப் ...
3. நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற ...
4. பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் ...
5. பொன்னான உலகென்று பெயரும் வைத்தான், இந்த பூமி ...
6. என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணை திறக்கவில்லை...
7. சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை ...
8. அங்கம் ஒரு தங்கக்குடம், அழகினில் மங்கை ஒரு கங்கை நதி ...
9. தாத்தா தானே பார்வை கொஞ்சம் குறைவாய் இருந்தால் என்ன ...
10. மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, January 21, 2005

சிறுவயது சிந்தனைகள் - 6

வடக்குக் குளக்கரைத் தெருவில் அமைந்த ஒரு பழைய வீட்டில் நாங்கள் வாழ்ந்த காலத்தில், பள்ளியில் உடன் படித்த பல நண்பர்களின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன (அல்லது) அத்தெருவின் வீடுகளில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் நண்பர்களாக இருந்தோம் என்றும் கொள்ளலாம்! அதென்னவோ, எங்கள் தெருவில் ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகளை விட அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பெண்பிள்ளைகள் என்றால், 5 அல்லது 6 பேர் (என் தமக்கையும் சேர்த்து) தான் இருந்தனர். ஆனால் ஆண்பிள்ளைகளோ ஏராளம்! கிட்டத்தட்ட 40 தடியர்கள் இருந்தோம்! பள்ளி முடிந்து நாங்கள் அனைவரும் வீடு திரும்பிய பின் ஒரு முக்கால் மணி நேரம் தெருவே இரைச்சலாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பின்னர், நாங்கள் கடற்கரைக்கு, கிரிக்கெட் அல்லது கபடி விளையாடச் சென்று விடுவது வழக்கம்.

எங்கள் குழுவிலிருந்த ஒருவருக்கும் பொதுவாக, பெண்பிள்ளைகளை கேலி, கிண்டல் செய்யும் பழக்கம் கிடையாது. பள்ளி, பள்ளி விட்டால் நிறைய அரட்டை/விளையாட்டு, கொஞ்சம் படிப்பும், என்று வாழ்ந்த காலமது! எங்கள் வீட்டின் இரு மருங்கிலும் கடைகள் இருந்தன. ஒன்று 'நாயுடு மளிகை' என்று அழைக்கப்பட்ட விஜயா ஸ்டோர்ஸ்; மற்றது, மணியை ஓனராகக் கொண்ட, 'மணி கடை' என்ற பொட்டிக்கடை. மணிகடையில் எங்களுக்கு வேண்டிய சகலமும் கிடைக்கும். பர்ஃபி, கடலை உருண்டை, புளிப்பு மிட்டாய், தேங்காய் பிஸ்கெட், பன்னீர் சோடா வகையறாக்களும், எங்கள் விளையாட்டு சீஸனுக்கு ஏற்றாற்போல், கோலி, பம்பரம், ரப்பர் பந்து, கில்லி தாண்டு போன்றவைகளும்! மணி சற்று குள்ளமான குண்டான உருவம் உடையவர். அவரது கடை சற்று உயரத்தில் அமைந்திருந்ததால், கடையில் ஏறி அமர்வதற்கு ஒரு சிறு ஏணி வைத்திருந்தார். மணி கடையில் ஏறிய பிறகு, அவரை அவ்வப்பொழுது நாங்கள் கிண்டல் செய்வது வாடிக்கையாக நடக்கும் ஒரு விஷயம்! கடையிலிருந்து வேகமாக இறங்கி வந்து எங்களை பிடிப்பது அவரால் இயலாத காரியம் என்பதால்!

அவர் கடையில் ஒரு வகை லாட்டரி பிரசித்தம். ஒரு அட்டையில், மடிக்கப்பட்ட சிறு கலர் காகித சீட்டுகள் பல வரிசைகளில் ஒட்டப்பட்டிருக்கும். பரிசுக்குரிய சீட்டில் ஒரு எண் அச்சிடப்பட்டிருக்கும். 5 பைசாவுக்கு ஒரு சீட்டை கிழித்துப் பிரிக்கலாம். உள்ளிருக்கும் எண், ஒரு சிறிய பரிசுப்பொருளையோ, சாப்பிடும் பதார்த்தத்தையோ குறிக்கும். எண் அச்சிடப்படாத (வெற்று) சீட்டை கிழித்துப் பிரிக்க நேர்ந்தால், கொடுத்த காசு அம்பேல்! பெரும்பாலும் இப்படியே நிகழ்ந்தாலும், நாங்கள் நம்பிக்கை இழக்காமல்(!) நிறைய காசு விட்டிருக்கிறோம்! சூதாட்ட ஆர்வத்தின் ஆரம்ப விதைகள் அப்போதே விதைக்கப்பட்டு பின்னாளில் மூணு சீட்டும், ரம்மியும் விடிய விடிய விளையாடியிருக்கிறோம்!!! சான்றோர் களவையும் கற்று மறக்கச் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? என்ன, மறப்பது சற்று கடினமான விஷயம், அவ்வளவே!!!

அடுத்த தெருவில், வேலு கடை (அதுவும் பொட்டிக் கடை தான்!) இருந்தது. அக்காலத்திலேயே, தற்போது டாடா, அம்பானிகளுக்கு இடையே நிலவுவது போல(!) மணிக்கும் வேலுவுக்கும் இடையே ஒரு தொழில் போட்டி (BUSINESS RIVALRY!) நிலவியது என்று கூறலாம்! வேலு கடையில் ஒரு பொருளை வாங்கச் சென்றால், மணி தன் கடையில் அப்பொருளை என்ன விலைக்கு விற்கிறார் என்று வேலு கேட்டு தெரிந்து கொள்வார். "அதை விட 5 பைசா கம்மி விலையில் நான் தருகிறேன். உன் நண்பர்களிடமும் சொல்லு!" என்பார். நான் வேலைக்குச் சேர்ந்த சமயம், மணி கடையை மூடி விட்டு, எங்கோ சென்று விட்டார். வேலு, இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

திருவல்லிக்கேணியின் பல பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்புகள் தோன்றி விட்ட நிலையிலும், நான் வாழ்ந்த பழைய வீடும் அதை ஒட்டிய மூன்று வீடுகளும் இன்று வரை அப்படியே இருப்பது ஆச்சரியமான ஒரு சங்கதி தான்! ஆனால், நான் அந்த வீட்டினுள் நுழைந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகி விட்டன. நான் வாழ்ந்த பழைய வீடும், அடுக்கு மாடி குடியிருப்பால் விழுங்கப்படுவதற்கு முன், ஒரு முறை உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரம் என் பழைய ஞாபகங்களோடு உறவாட வேண்டும், சில புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், என்று சில வருடங்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்! ஏதோ ஒருவித தயக்கம்!

சில நாட்களுக்கு முன், என் மகளுடன் அவ்வழியாக சென்று கொண்டிருந்த என்னை, நான் வாழ்ந்த பழைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் சிறுவயது தோழன் நரசிம்மன் அழைத்து பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் "நான் இருந்த பழைய வீட்டை என் மகளுக்கு காட்ட வேண்டும், கூட வருகிறாயா?" என்றவுடன், தற்போது அவ்வீட்டில் வசிப்பவர்களுடன் பழக்கமில்லை என்று கூறி மறுத்து விட்டான். என் மகளின் மிகுந்த கட்டாயத்தின் பேரில், வாசலில் அமர்ந்திருந்த கண் பார்வை மங்கிய பாட்டியின் விசாரணைக்கு உட்பட்டு, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து வீட்டில் நுழைந்தேன்!

பழைய மர வாசற்கதவு இரும்புக் (grill) கதவாக மாறியிருந்தது. இடதுபுற திண்ணை இன்னும் இருந்தது. ரேழிக்கு முன்னே அக்காலத்தில் காணப்பட்ட, வேலைப்பாடுகள் நிறைந்த, பிரம்மாண்ட மரக்கதவு இருந்த இடத்தில், ஒரு நோஞ்சான் கதவு முளைத்திருந்தது! மேல்தளத்தில் பதிக்கப்பட்ட சதுர கண்ணாடி வாயிலாக ஒளி பாய்ந்தும், சற்றே இருள் சூழ்ந்த, அதே பழைய நடை! அதே பழைய வாசனை, சில்லிப்பு! அடுத்தடுத்து இருந்த வலதுபுற அறைகளுக்கு (
அக்கால சமையலறைகள்) இடையே இருந்த சுவர்கள் இடிக்கப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. பழைய மாடிப்படிகளுக்குக் கீழே, Hand pump முன்பிருந்தது போலவே! ஆனால், அப்போதிருந்த ஒரு பித்தளை பாயிலரை காணவில்லை!!! வீட்டின் பின்புறம் இருந்த குளியல் மற்றும் கழிவறைகளின் கதவுகள் மட்டும் புதிதாக இருந்தன! 'பல ஆடைகள்' கண்ட துணி துவைக்கும் கல் அப்படியே இருந்தது!

அக்காலத்தில் எங்களின் சக குடித்தனவாசிகளைப் பற்றிய ஞாபகங்கள் பெருக்கெடுத்தன! குறிப்பாக, எப்போதும் மங்கலகரமாகவும், சிரித்த முகத்துடனும் காணப்பட்ட, சுமங்கலியாய் இறந்து போன ராஜமாமி, அவரது 'பஞ்ச பாண்டவ' மகன்களில் ஒருவனான 'சிவாஜி' சாரதி, எச்சில் தெறிக்க படபடவென பேசும் 'தீர்த்தவாரி' ராகவன் மாமா, அதையும் பொருட்படுத்தாமல் அவருடன் பேசத் தூண்டும் வகையில் அமைந்த அவரது மிக அழகிய மகள் 'வெடி' ரமா, பூமா டீச்சரை தவிக்க விட்டு, 12 வருடங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போன, PONDS கம்பெனியில் வேலை பார்த்து வந்த 'வெத்தலை பாக்கு' ஸ்ரீநிவாசன் மாமா, வாய் ஓயாமல் வம்படிக்கும் வாளிப்பான சுகுணா மாமி, தற்போது ராணுவத்தில் பணி புரியும் நண்பன் சம்பத் குமார், ஓய்வு ஒழிச்சலின்றி எந்நேரமும் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்த என் பாட்டி ஜானகியம்மாள், உத்தரத்திலிருந்து கயிற்றை தொங்கவிட்டு, அதில் கிரிக்கெட் பந்தை கட்டி, வீட்டிற்குள்ளேயே பயிற்சி செய்த ஸ்ரீதர், SV சேகருடன் நாடகங்களில் நடித்த பக்கத்து விட்டு 'பொட்லம்' ராஜாமணி, பாத்திரம் கழுவி துணி துவைத்து எங்களுக்காக மாங்கு மாங்கென்று உழைத்த, இன்று வரை எங்கள் மேல் பிரியத்துடன் இருக்கும் பணிப்பெண் கன்னியம்மாள், என் திருமணத்திற்கு விலை உயர்ந்த கடிகாரத்தை பரிசாக வழங்கிய, தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கன்னியம்மாளின் தாயார் லஷ்மியாச்சி ஆகியோர் குறித்த நினைவுகள் / நிகழ்வுகள் பல தோன்றின.

என் மகளுக்கு வீட்டைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றியும் விவரித்தபடி, மாடியேறி சென்றேன். முன் போலவே, காற்று முகத்தில் அடித்து வரவேற்றது! கீழே மாற்றப்பட்டது போலவே, மாடியிலும், இரு படுக்கையறைகள், சமையலறைகளாக மாற்றப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. நான் கோலி, கில்லி, கிரிக்கெட் ஆடிய மொட்டை மாடிக்குச் செல்ல அக்காலத்தில் படிக்கட்டுக்கள் கிடையாது. பக்கத்து வீட்டு வழியாகவோ அல்லது ஜன்னல் கம்பி பிடித்து, சாரத்தில் தலையை இடித்துக் கொள்ளாமல் சிரமப்பட்டு ஏறியோ மொட்டை மாடிக்குச் செல்வது எங்கள் வழக்கம்! தற்போது, மேலே செல்ல ஒரு இரும்பு ஏணி முளைத்திருந்தது! நான் பார்த்தவரை, பழைய வீடு பெருமளவு அப்படியே தான் இருந்தது. பழைய மனிதர்களைத் தான் காணவில்லை! வீட்டை புகைப்படங்கள் எடுக்கவும் மறந்து விட்டேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா


Thursday, January 20, 2005

ஏன் மது அருந்தக் கூடாது?

நான் இதுவரை குடித்த பீர்களை எண்ணி சில சமயம் வெட்கம் அடைகிறேன். ஆனால், பீர் அருந்தும் குடுவையை (pitcher) பார்க்கும்போது, இந்த பீரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களும், அவர்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும் நினைவுக்கு வந்து, நான் இந்த் பீரை அருந்தாவிடில், அவர்கள் வேலையை இழந்து விடுவார்களே என்ற கவலை ஏற்பட்டு விடுகிறது! "அத்தொழிலாளர்களின் கனவுகள் நனவுகளாக இந்த பீரை அருந்துவதை விடுத்து எனது கல்லீரலைப் பற்றி மட்டும் சுயநலமாக சிந்திப்பது தவறவல்லவா?" என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டு விடுகிறேன்!
--- Jack Handy


நான் குடிக்காதவர்களை கண்டு வருத்தமடைகிறேன்! அவர்கள் காலையில் விழிக்கும்போது எவ்விதம் உணருகிறார்களோ, அவ்விதமே நாள் முழுதும் உணரவிருப்பதைக் கண்டு!
--- Frank Sinatra


முட்டாள்களுடன் நேரம் செலவிடுவதற்காக ஒரு புத்திசாலி, சில சமயங்களில், அதிகம் குடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான்!
--- Ernest Hemingway


குடிப்பதினால் உண்டாகும் கெடுதல்களைப் பற்றி படித்தவுடன், நான் படிப்பதையே நிறுத்தி விட்டேன்!
--- Henry Youngman


கடவுள் நம்மை விரும்புகிறார் என்பதற்கும், அவர் நாம் மகிழ்ச்சியாக இருக்க விழைகிறார் என்பதற்கும், மதுவே சிறந்த சாட்சி!
--- Benjamin Franklin


போதையுடன்,
ஒரு குடிகாரன்
(பாலா என்று தப்புக் கணக்கு போட வேண்டாம்!)

மற்றுமொரு காஞ்சி மடத்தில் கொலை!

சாமிக்கு டைம் சரியில்லை! அவர் பெயிலில் வெளியே வந்தவுடன், இது நடந்திருப்பதால், அரசு தரப்புக்குத் தான் ஆதாயம். சில வெறும் வாய்களுக்கு அவலும் :-) கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.

Another murder rocks Kanchi mutt - Newindpress.com

Saturday, January 01, 2005

கண்ணியமில்லா ஒளிபரப்பு!

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் (9/11) தகர்க்கப்பட்ட சமயத்தில், பல மேற்கத்திய டிவி சேனல்கள், உயிரிழப்பைப் படம் பிடித்துக் காட்டியபோது, ஓரளவு கண்ணியத்தை கடைபிடித்தன. பார்ப்போரை, குறிப்பாக, சிறுவர் சிறுமியரை பாதிக்கக்கூடிய காட்சிகளை அந்த ஊடகங்களே தடை செய்தன. ஒருவர், எரிகின்ற கட்டடத்திலிருந்து, தன் சாவை நோக்கி, குதிக்கும் ஒரு காட்சியைத் தவிர, கண்டிக்கத்தக்க வகையில் வேறெதையும் குறிப்பிட இயலாது.

ஆனால், தமிழ்நாட்டில் சுனாமி நிகழ்த்திய பேரழிவுக்குப் பின், ஒளிபரப்பில் கண்ணியம் என்ற பேச்சுக்கே இடமில்லை! வரைமுறையற்ற வகையில், காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பப் பட்டன. கண்ணியமற்ற வகையில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பெருஞ் சோகங்களை, அவர்களின் உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல், படம் பிடித்து பட்டவர்த்தனமாக ஒளிபரப்பியது, வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று! சடலங்களைக் காட்டுவதிலும் ஒரு நெறிமுறை வேண்டாமா? சன் நியூஸ் தொலைக்காட்சியில் கடந்த 5 நாட்களாக இது வாடிக்கையாக நடந்து வந்தது, பார்க்கக் கொடுமையாக இருந்தது.

இக்காட்சிகளை கண்கூடாகப் பார்த்தால் தான், பொதுமக்கள் உதவி செய்வார்கள் என்று ஊடகங்களே கற்பனை செய்து கொண்டு, இறந்தவர்களையும், மிகுந்த பாதிப்புக்கு உள்ளானவர்களையும், பார்ப்போரையும், கேவலப்படுத்தும் செயல் இது. நம்மூர்க்காரர்கள் படம் பிடித்து அனுப்பிய இம்மாதிரி காட்சிகள், BBC, CNN போன்ற அயல்நாட்டு சேனல்களிலும் தாராளமாக ஒளிபரப்பாயின. இந்நிலை இந்தியருக்குத் தான் என்றல்ல, இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் உயிரிழந்தவர்களுக்கும் இதே கதி தான்!

சுனாமியால் இறந்தவர்களின் சடலங்களை ஏதோ சந்தைப் பொருட்களைப் போல் படம் பிடித்துக் காட்டுவது சுத்த கண்ணியமற்ற செயலோடு, இறந்தவருக்குச் செய்யும் அவமரியாதையும் ஆகும். இவ்வாறு காட்டிய மறுநிமிடமே, 'அப்படிப்போடு, போடு!' என்ற ஒரு கூத்தடிக்கும் பாடலை ஒளிபரப்புவதை விடக் கேவலம்/அபத்தம் வேறொன்றும் கிடையாது! வியாபார நோக்கிற்கு, இத்தகைய சூழ்நிலையில், ஒரு நெறிமுறை வகுத்துக் கொள்வது அவசியம். இதைப் பற்றியெல்லாம் இங்கே ஒருவருக்கும் அக்கறை இருப்பதாகத் தோன்றவில்லை.

ஏதோ ஒரு டிவி சேனலின் ஒளிப்பதிவாளர், உறவினர்களை இழந்து கதறியழும் பெண்களை, வரிசையாக அமர்ந்தால் தான் படம் பிடிக்க வசதியாக இருக்கும் எனக் கூறினாராம்! இன்னொருவர், சுனாமியால் இந்தியாவின் மக்கள்தொகை குறைந்தால் நல்லது தானே என்றாராம். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நம்மூரில், பொதுவாக, ஏழைகளின் உயிர்களுக்கு மதிப்பு இல்லை என்பதே நிதர்சனம்.

தற்போது நிகழ்ந்தது போல், சுனாமியால், எதிர்காலத்தில் பேரழிவு நிகழாமல் தடுக்க, அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இவற்றையெல்லாம் விட, மிக அவசியமானது, பெரும்பாலான (90%) அரசாங்கத் திட்டங்கள், ஏழை எளியவர்களின் நலன் குறித்து அமைவதும், அத்திட்டங்களின் முழுப்பயன்கள் அவர்களை சரியாகச் சென்றடைவதும் தான்! அதே போல், எந்த ஒரு நாட்டில், சுனாமி/பூகம்பம் போன்றவைகளால் பாதிப்பு இல்லாத சூழலிலும், வசதி படைத்த மக்கள், வறுமையில் உழலும் நலிந்த ஏழை எளியவர்களையும், முதியவர்களையும், அரவணைத்து, ஆதரித்து, அன்னாரின் பாதுகாப்பான வாழ்வுக்கு தங்களால் இயன்றதைச் செய்வதை தேசியக் கடமையாக எண்ணுகிறார்களோ, அந்நாட்டு மக்கள் யாவரும் கவலையின்றி நலமாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails